விழுப்புரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த தாதா மணி மீது விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகள் சம்மந்தமாக அவரை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பாலமுருகன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தாதா மணி சென்னை கொரட்டூரில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அவரை கைது செய்ய சென்றபோது, அவர் கத்தியால் தாக்கியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு காயமடைந்தார். இதையடுத்து தாதா மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
பின்னர் தாதா மணிகண்டனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு சார்பில் மாஜிஸ்திரேட் நேரடியாக பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர் மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாதா மணிகண்டனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா குயிலாப்பாளையம்.