மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் திருநெல்லிப்பட்டி ஊராட்சி குப்பனார்பட்டியில் உள்ள குளத்தின் அருகே காவிரி குடிநீருக்காக 2004-ல் ரூ. 6.20 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்து அருகிலுள்ள 20 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீரில் தொடர்ந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். அதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்களே துர்நாற்றம் வந்த இடத்தில் குடிநீர் குழாயினை தோண்டி பார்த்தபோது அதில் அணில் ஒன்று உயிரிழந்து, அதன் உடல் முழுவதும் கரைந்து காணப்பட்டது. இதையறியாமல் கடந்த சில நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் அந்த குடிநீரை குடித்து வந்துள்ளனர். தற்போது உயிரிழந்த அணில் கிடைக்கப்பெற்ற நிலையில் அணில் உடல் கரைந்து வந்த குடிநீரை பருகி வந்ததால் தங்களுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.