நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, விஜயகாந்திடன் உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், காலை 6:10 மணியளவில் மறைந்த விஜயகாந்த்தின் உடல், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை (29-12-23) மாலை 4:45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என விஜயகாந்த்தின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், இன்றும் (28-12-23), நாளையும் கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.