கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று இருக்க வேண்டிய வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அதிக பணம் பறிமுதல் நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டது. மூன்று மாதத்திற்கு பின்பு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவது, வாக்குக்கு பணம் தர வைத்திருப்பது, அதிக பண நடமாட்டம் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தாருங்கள் என சென்னை வருமானவரி புலனாய்வுத்துறை விளம்பரம் செய்துள்ளது. அதற்காக கட்டணம்மில்லா தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 13 ஆம் தேதி மதியம் வேலூர் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள புதுவசூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்த ஏழுமலை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைக்காக செய்தனர்.
சோதனையில் அவரது வீட்டில் இருந்து 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை வருமானவரித்துறை அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த பணம் தன்னுடையது தான் என ஏழுமலை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பணம் தேர்தல் செலவுக்காக வைத்திருந்த பணமா? திமுக வேட்பாளர் தரப்பில் இருந்து தந்து வைக்கப்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக வேட்பாளர் தரப்பில் விசாரித்த போது, அந்த பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியால் அவமானமாகியுள்ள பாஜக- அதிமுக கூட்டணி, இந்த வேலூர் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என துடிக்கிறது. இதற்காக அரசு இயந்திரம் முழுவதையும் திமுக பக்கம்மே திருப்பி விட்டு எங்களை முடக்க திட்டமிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் செய்யவே நெருக்கடி தர முடிவு செய்து, மன ரீதியாக பலவீனப்படுத்த முடிவு செய்துள்ளார்கள். இதனையெல்லாம் அறிந்தே தேர்தல் வேலை செய்ய தொடங்கியுள்ளோம் என்கிறார்கள்.