வேலூர் மாவட்டம், காட்பாடி காவல்நிலைய ஆய்வாளர் புகழ், ஒரு புகார் தொடர்பாக வழக்கறிஞர் வேலு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கறிஞர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக காட்பாடி வழக்கறிஞர்கள் கடந்த நவம்பர் மாதம் 10 ந்தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி நீதிமன்றம் மட்டுமல்லாமல் குடியாத்தம், வேலூர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடக்காமல் நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 2ந்தேதி நடைபெற்ற காட்பாடி பார் அசோசியேஸன் கூட்டத்தில் டிசம்பர் 5ந்தேதி காவல்துறை ஆய்வாளர் புகழை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர் சங்கங்கள் இணைந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையும் – வழக்கறிஞர்களும் மோதிக்கொண்டு இருப்பதால் பொதுமக்கள் தான் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.