திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு வாழைக்காய் மார்க்கெட்டில் ஆயுதபூஜை விற்பனைக்காக வாழைத் தார்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு நாளில் நடைபெற உள்ள ஆயுத பூஜை விழாவினை யொட்டி அதிக தேவையான வாழைத்தார்கள் வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு வந்ததின் மூலம் மார்க்கெட்டும் களைகட்டிவருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், தேனி, குளித்தலை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக லாரிகள் மூலம் வாழைத்தார்கள் கொண்டுவரப்பட்டன.
அதோடு உள்ளூர் வாழை விவசாயிகள் அதிக அளவில் வாழைத் தார்களை வெட்டி மார்க்கெட்டுக்கு எடுத்து வந்திருந்தனர். இதனால் வாழைத்தார் மார்க்கெட்டே நிரம்பியது ஆயுத பூஜைக்கு பெரும்பான்மையாக விற்பனையாகும் பூவன், கற்பூரவள்ளி, நாட்டு வாழை ஆகிய ரகங்கள் அதிக அளவில் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு இருந்தது.
தேவைக்கு அதிகமாக இருப்பதால் வியாபாரிகளும் வாழைத்தார்கள் ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர். பூவன் வாழைத்தார் ரூபாய் 200 முதல் 500 வரை விற்பனையானது, கற்பூரவல்லி வாழைத்தார் ரூபாய் 300 முதல் 600 வரை விற்பனையானது, நாட்டு வாழைத்தார் ரூபாய் 150 முதல் 400 வரை விற்பனையானது. மேலும் ரஸ்தாளி, செவ்வாழை, பச்சை வாழை ஆகிய ரகங்களும் குறைந்த அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
விற்பனையான வாழைத்தார்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. விஷேச காலங்களில் கூடுதலாக விலை கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த வாழை விவசாயிகள் ஏலத்தில் சராசரியான விலை கிடைக்கவே ஏமாற்றம் அடைந்தனர் இருந்தாலும் வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக லாபம் கிடைத்ததை கண்டு வாழை விவசாயிகளும் மனம் நிம்மதி அடைந்து வருகிறார்கள்.