கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க. மகளிரணியின் தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் இன்று (30/06/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கோவை மாநகராட்சி, 63- வது வார்டில் உள்ள, ராமகிருஷ்ணபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11 மற்றும் 12- ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் நீண்ட விடுப்பு எடுத்துள்ளார். தற்போது இந்தப் பள்ளியில்,11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் எடுத்து வரும் ஆசிரியர் லீலா மகேஸ்வரி என்பவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 11- ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், ஆங்கில ஆசிரியர் இடம் காலியாக இருப்பதால், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை, அப்பகுதி பொதுமக்களும், மாணவிகளும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆங்கில மொழிப்பாடம் என்பது மிகமிக முக்கியமானது. தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆங்கில மொழிப்பாடத்தை பயிற்றுவிக்க, திறமையான ஆங்கில ஆசிரியர்கள் தேவை. மற்ற பாடங்களின் ஆசிரியர்கள், ஆங்கில மொழிப்பாடத்தை எடுத்துவிட முடியாது. எனவே, 11-ம் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே, ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் உயர் கல்விக்கும், எதிர்காலத்திற்கும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் கற்பது அவசியம். எனவே, கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் இதில் தலையிட்டு, உடனடியாக ஆங்கில ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் செய்யப்படும் ஒருநாள் தாமதம்கூட, மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.