விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பது அவர்களது விளைநிலம் தான். அந்த விளைநிலத்தை கூறுபோடும் அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் பல நடைபெறுகிறது. அதில் ஒன்றுதான் பெட்ரோல் குழாய்கள் கொண்டு செல்லும் திட்டம். இது மிகப்பெரிய அளவில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என பல போராட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் விவசாய அமைப்புகள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் மற்றொரு எம்பியான ஈரோடு கணேசமூர்த்தி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
அவர்கள் அந்த மனுவில் கூறிய விவரம் "தமிழ்நாட்டில் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில் 13 மாவட்டங்கள் வழியாக பெட்ரோல் குழாய்கள் விவசாய விளைநிலங்கள் வழியாக பதிக்கும் பணியில் மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் ஈடுபட்டுவருகிறது. இந்த 13 மாவட்டங்களில் விவசாயிகள் அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது இந்த விளைநிலம் தான். இது விளை நிலத்தை கூறுபோடும் வேலையாக இருக்கிறது. பெட்ரோல் குழாய்களை மாற்று பாதையில் கொண்டு செல்லலாம் நான்கு வழி சாலை மற்றும் நெடுஞ்சாலை வழியே கொண்டு செல்லவேண்டும், விவசாய விளை நிலங்கள் வழியே கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளார்கள்.
இந்த மனுவில் திருப்பூர் நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான திருப்பூர் சுப்பராயன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற எம்பியான கொ.ம.தே.க. ஏகே சின்னராஜ் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்வதாக கூறியிருக்கிறார்.