Skip to main content

வைகோவின் 10 நாள் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published on 31/03/2018 | Edited on 31/03/2018


 

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. அதன்படி மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இன்று காலை தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
 

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பழ.நெடுமாறன், சுப.உதயகுமார், வேல்முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

வைகோவின் நடைபயணம் இன்று மாலை தேனி மெயின் ரோடு விராட்டிபத்து வழியாக செக்கானூரணி சென்றடைகிறது. வைகோ அங்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை உசிலம்பட்டி, அதை தொடர்ந்து ஆண்டிப்பட்டி, போடி, கூடலூர் செல்லும் வைகோ வருகிற 9-ந்தேதி தனது 10-வது நடைபயணத்தை கம்பத்தில் நிறைவு செய்கிறார். மதுரை, தேனி மாவட்டங்களில் 250 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்லும் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் தனது போராட்ட வியூகத்தை அமைத்துள்ளார். நடைபயணத்தின்போது வைகோவுக்கு அந்தந்த பகுதிகளில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளிக்கவும், அவரது நடை பயணத்தில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளனர். 
 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
 

சார்ந்த செய்திகள்