கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தில் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் மிஷின் வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த வேலை செய்வதால் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நண்பர்களையும் அவர் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள சிலருக்குப் பிடிக்காததால், பஞ்சாயத்தில் கூடி முடிவெடுக்கப்பட்டதாக குமார் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு தகாத வார்த்தைகளிலும் திட்டுவதாகக் கூறுகின்றார்.
மேலும் வீட்டிற்குச் செல்லும் தண்ணீர் குழாய் துண்டித்துள்ளதாகவும் எந்தக் கோயில்களிலும் அனுமதிக்காமலும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்களாம். காரணம் கேட்கும் பொழுது இது பஞ்சாயத்தின் முடிவு என்று கூறுகின்றனர். அதே போல கோயிலுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தையும் திருப்பி குமாரிடமே கொடுக்கப்பட்டதாகவும் அடிப்படை உரிமை கூட கிடைக்காத இந்த மண்ணில் வாழ்வதைவிடச் சாவதே மேல் என குடும்பத்தோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததோடு, வட்டாட்சியர் கோவிந்தராஜியிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
நீங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாகக் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வட்டாட்சியர் கோவிந்தராஜ், “நிச்சயம் உங்களுக்கு நீதியை பெற்றுத் தருகிறேன்” என சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.