அதிமுக கூட்டணி தான் பாஜகவிற்கு பலம். அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் இருக்கும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் எஸ்.வி. சேகர் பேசுகையில், ''ஒவ்வொரு முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது மோடி அரசை குறை சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒன்று சேர்ந்து என்ற அந்த வார்த்தையே ஒரு கேள்விக்குறி. இதுவரைக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒருமித்த கருத்தாக ஒன்று சேரவே இல்லை. அவர்கள் அவர்களது குறைகளை பாராளுமன்றத்தினுடைய புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்து செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை மூலமாக இன்று மோடி பதில் சொல்லப் போகிறார். மக்கள் நம்பிக்கையில் அவர் தான் வெற்றி பெறுவார். நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த முறையும் தோல்வியைத் தான் அடையும்.
தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலையில் இல்லை. அதை ஒன்றும் செய்ய முடியாது. தலைமைக்கு நடைப்பயணம் போகவே டைம் இல்ல. நடைப்பயணம் பஸ்ல போய்க்கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோ மீட்டர் நடக்கிறாராம். அதுவே அவருக்கு முடியவில்லை. இந்த நடைப்பயணத்தினால் ஒன்றும் நடக்காது. அண்ணாமலை என்பது அரசியல் பூஜ்ஜியம் தான் தமிழ்நாட்டில். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் குறைந்தது பத்து வருடம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருபவர்களுக்கு தான் பாஜகவின் ஐடியாலஜி எல்லாம் தெரியும். ஆனால் யாரோ ஒருத்தர் திடீரென வந்து சிலரை சந்தோஷப்படுத்த திடீரென பதவி கொடுத்திருக்கிறார்கள். இது பாஜகவிற்கு தான் நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆட்சிக்கு பிஜேபி வரும் டெல்லியில். தமிழ்நாட்டினுடைய உதவியே இருக்காது. அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் இருக்கும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது. அதற்கு வாய்ப்பே கிடையாது. அண்ணாமலையை பொறுத்தவரை அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது போன்றே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணி தான் பாஜகவிற்கு பலம். அந்த பலத்தை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.'' என்றார்.