புதுச்சேரி வில்லியனூர் தொகுதியை சேர்ந்த அரும்பார்த்தபுரம் பகுதி தொடங்கி உழவர்கரை தொகுதி சுல்தான்பேட்டையில் முடிகிறது. அரும்பார்த்தபுரம் பாலம். 2013 ஆம் ஆண்டில், சுமார் 55 கோடி செலவில் துவங்கிய பால பணிகள் 5 ஆண்டுகளாக இன்னமும் நடக்கிறது. அவசியமே இல்லாமல் இப்பாலத்தை வளைத்து நெளித்துக் கட்டியிருப்பதாலும், நில உடமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால்தான் ஐந்தாண்டுகள் கடந்தும் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு விடப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த பாலம் பயன்பாட்டுக்கு வராததால் மாணவர்கள், வியாபரிகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இவ்வழியே கடக்க வேண்டிய வாகனங்கள் மனவெளி, மூலக்குளம், சித்தவீரன்பட்டு பகுதிகளை சுற்றி செல்கிறார்கள். அவ்வழி குறுகிய வழியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
கடுமையான போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதால் கால தாமதமும், எரிபொருள் விரயமும் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவது நடக்கிறது. அதே சமயம் லெவல் கிராசிங்கில் கேட் போட்டு பின்னர் திறப்பதற்குள் அரை கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவைகளை கடப்பதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலாகிவிடுகிறது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்வது இயலாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வாரியிறைத்துவிட்டு, பாலத்தை அப்படியே போட்டு வைத்திருப்பதன் மர்மம் என்ன?
இதுகுறித்து புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கரன் நம்மிடம்,
”அரும்பார்த்தபுரம் பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் கூட, அதைப் பயன்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் இருப்பதால்தான் பாலத்தின் வேலையை முடிக்காமல் வைத்திருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். பல்வேறு வளைவு, நெளிவுகளுடன் கட்டப்பட்டிருப்பது ஏன்? என்று கேள்வியும் எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.
இப்பாலம் அகலம் குறைவாகவும், மூன்று இடங்களில் வளைத்தும் கட்டப்பட்டிருக்கிறது. இப்பாலம் இருவழிப் போக்குவரத்துக்கு பயன்படாது என்கிறார்கள் பலர். ஒருவழிப் பாதையாகவே இருந்தாலும் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது சென்று வளைவுகளில் திரும்ப இயலாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
நூறு அடி சாலை போலவே சாலையின் வழியிலேயே மேம்பாலத்தை அமைக்காமல் அவ்வளவு இடங்களை வளைத்துக் கோடிகளை வீணாக்கியது ஏன்?! கீழே சுரங்கப்பாதை அமைப்பது ஏன்?.
இவ்வளவு செலவு செய்தும் பாலம் இருவழிப் பாதையாகப் பயன்படாது, ஒருவழிப்பாதைதான் சாத்தியம் என்கிறார்கள் மக்கள். இதே நேரத்தில் பணி துவக்கிய நூறு அடி சாலை மேம்பாலம் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
ரயில்வே துறையினர் அவர்கள் பகுதியில் வேலை முடித்து விட்டார்கள். ஆனால் மாநில அரசுதான் அலட்சியமாக உள்ளது.
இந்த பாலத்திற்கான வழித்தடத்தில் உள்ள நில உடைமையாளர்கள் 4 பேருக்கு இழப்பீடு கொடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. முன்பு இடம் கொடுக்க 1 கோடிக்கு மேல் அதிக இழப்பீடு கேட்டுள்ளனர். அரசு 1 கோடி வரை கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால் அவர்கள் அடம்பிடித்ததால் கையகபப்டுத்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது அரசு நிர்ணயித்த தொகையை கொடுக்க சம்மதித்துள்ளனர், ஆனால் ”நாங்கள் கொடுக்கும்போது வாங்கவில்லை, நீங்கள் கொடுத்தவுடன் வாங்கிக்கொள்ள வேண்டுமா…?” என அரசு ஈகோ பார்ப்பதால் இழுபறி நீடிப்பதாக சொல்கிறார்கள்.
எது எப்படியோ, இப்பாலத்தின் பணிகள் அடுத்த மூன்றுமாத காலத்துக்குள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படவேண்டும். இல்லையென்றால் மகக்ளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்கிறார்.
பாலம் கட்டி முடித்துத் திறப்பதற்குள் குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆளாகிவிடுவர் போலிருக்கிறது எனும் மக்கள், பாலம் திறக்கும் நாளை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.