திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இருக்கக்கூடிய மீனவ கிராமம் ஒன்றில், ஆளில்லா விமானம் ஒன்று கரையொதுங்கியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்தது, சில நாட்களுக்கு முன்பு இதேபோல், ஆளில்லா விமானம் ஏற்கனவே கரையொதுங்கியது தான் இந்தப் பரபரப்பிற்குக் காரணம்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள கோரைக்குப்பம் என்ற மீனவ கிராமத்தில், கடந்த 5 ஆம் தேதி ஆளில்லா குட்டிவிமானம் ஒன்று கரையொதுங்கியது. அதனைக்கண்ட மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமானத்தை மீட்ட காவல்துறையினர், அந்த விமானத்தை காவல்நிலையம் எடுத்துச் சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
பழவேற்காட்டில் மத்திய அரசின் துறைமுகம், அனல் மின்நிலையம் போன்றவை இருப்பதால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட விமானமா? அல்லது மாணவர்களின் கண்டுபிடிப்பா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. ஆனால், விசாரணையில் அந்த விமானம் ஆந்திர விமானப்படைக்குச் சொந்தமானது என ஆந்திர விமானப் படையினர் திரும்பப் பெற்றனர். இந்நிலையில், தற்பொழுது அதேபோல் குட்டி ஆளில்லா விமானம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. அதனையும் போலீசார் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளில்லா விமானம் கரையொதுங்கியிருப்பது மீனவ கிராம மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.