பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் குற்றங்களுக்கு எதிராகக் கூடுதல் தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இன்றைய கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். அப்போது, இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது, "விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவடங்களில் உள்ள கல்லூரிகள் இடம்பெறும்" என்று தெரிவித்தார். இதற்கான சட்ட முன்வடிவத்தை அமைச்சர் தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார்.
மேலும் வேலூர், திருவள்ளூர் பல்கலைகழங்களில் இருந்து பிரிக்கப்பட்ட கல்லூரிகள் புதிய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படும். இதற்கு முன்னர், நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.