சென்னை குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த இவர், 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோற்றதால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் ஜெகதீஸ்வரன் இறந்த சோகத்தில், அவரின் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடத்திய ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டேன் என மாணவர்களின் பெற்றோருக்கு பதிலளித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஏற்கனவே நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதா தற்பொழுது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் நிகழ்ந்துள்ள இந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு உடனடியாக குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் 'நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நடந்து வருகிறது' என கவலை தெரிவித்துள்ள முதல்வர், 'தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்திருக்கிறது வேதனையைத் தருகிறது. நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.