கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சின்னகானல் பகுதியில் 10 பேருக்கும் மேற்பட்டோரை தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் எனும் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. முதற்கட்டமாக மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஏற்கனவே இந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஆறு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்தது. அங்கிருந்து மேகமலைச் சென்ற யானை மீண்டும் குமுளியில் இறங்கி தற்போது கம்பம் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளது. இரண்டு நாட்களாக வனத்துறைக்கு அரிசிக்கொம்பன் போக்கு காட்டி வருகிறது.
அரிக்கொம்பன் யானையானது கம்பம் சுருளிபட்டி அருகே உள்ள கூத்தநாச்சியார் காப்பு காட்டிற்குள் சென்றது. தொடர்ந்து அரிக்கொம்பன் நடமாட்டம் இருப்பதால் மேகமலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க வன அதிகாரிகள் மூன்று கும்கி யானைகளுடன் கடுமையாக முயற்சித்தாலும் அவர்களிடம் பிடிபடாமல் காட்டு யானை தொடர்ந்து நடமாடிக் கொண்டே இருக்கிறது. யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள செயற்கைக் கோள் பட்டையுடன் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் யானை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகமாகவே உள்ளன. யானையின் தொடர் நடமாட்டத்தினால் கம்பம் பகுதியில் மக்கள் தொடர்ந்து 4 நாட்களாக வீட்டிற்குள் முடங்கினர். தற்போது அரிக்கொம்பன் சுருளிபட்டியில் நடமாடி வருகிறது. இதுவரை பத்து பேரை தாக்கியுள்ள அரிக்கொம்பன் 70க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளைச் சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேனி கம்பம் நகரில் அரிக்கொம்பன் யானையால் தாக்கப்பட்ட பால்ராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 27 ஆம் தேதி ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை பால்ராஜை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பால்ராஜ் உயிரிழந்துள்ளார்.