Skip to main content

எங்களுக்கு பயமா இருக்கு சார்... உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் அமைச்சரிடம் கண்ணீர் பேச்சு!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

ukrain students crying video call minister

 

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலால் இந்தியாவிலிருந்து மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். பல இடங்களில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

 

குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் ரஷ்யாவின் எல்லைப் பகுதியான கார்கீவ் பகுதியில் தொடர்ந்து பதற்றத்துடன் உள்ளனர். இந்திய மாணவர்கள், பொதுமக்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் உள்ள இந்திய மாணவர்களை ஹங்கேரி எல்லைக்கு வரவைத்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். 

 

ஆனால் கீவ் பகுதியில் உக்ரைன் நாட்டின் முழு ராணுவமும் நிறுத்தப்பட்டு அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து தாக்குதலை முறியடித்து வருவதால், கீவ் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே பாலங்களையும் உடைத்துள்ளனர். அதனால் இந்திய, தமிழக மாணவர்கள் வெளியே செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாகவும் திருத்துறைப்பூண்டி சந்தோஷ் உள்ளிட்ட மாணவர்கள் நம்மிடம் கூறுகின்றனர்.

 

அதேபோல் ரஷ்ய எல்லையான கார்கீவ் பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் தங்கியுள்ள மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் இன்று (26/02/2022) புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பாச்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகரெத்தினம் மகன் நவீன் உள்பட ஏராளமான மாணவர்கள் கார்கீவ் பதியில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்று மாணவன் நவீனின் பெற்றோர் அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

 

உடனே கார்கீவில் உள்ள நவீனிடம் அமைச்சர் மெய்யநாதன் வீடியோ காலில் பேசி தைரியமாக இருங்கள் உங்களை பாதுகாப்பாக அழைத்து வர தமிழக முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார். 

 

அப்போது அமைச்சரிடம் பேசிய மாணவன், "ரஷ்ய எல்லை பகுதியில் இருப்பதால் பயமாக உள்ளது. என்னைப் போல ஏராளமானவர்கள் தவிப்போடு இருக்கிறோம். உணவுப் பற்றாக்குறையாக உள்ளது. எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள்" என்று கண் கலங்கினார்.

 

"விரைவில் சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கிறது தமிழக அரசு. நம்பிக்கையோடு தைரியமாக இருங்கள் மற்றவர்களிடமும் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்