கள்ளக்குறிச்சி மாவட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர்(60) மற்றும் வேல்முருகன்(33) ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டையில் இருந்து பு.மாம்பாக்கம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வெளிப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் மாடு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர் இருசக்கர வாகனத்தை இடது பக்கத்தில் போட்டுவிட்டு வலது பக்கத்தில் இருந்த விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அவருடன் சேர்ந்து வேல்முருகனும் குதித்தார்.
அப்பொழுது கிணற்றில் இருந்த பாறையில் மோதி இருவரும் காயம் அடைந்த நிலையில் அவர்கள் கிணற்றிலிருந்தபடி தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த ராஜ்குமார் என்று இளைஞர் கிணற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்ற நிலையில் அவரும் மேலே ஏற முடியாது தவித்தார்.
தொடர்ந்து மூன்று பேரும் கூச்சலிட்ட நிலையில் அந்தப் பகுதியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான குழுவினர் சுமார் 2 மணி நேரமாகப் போராடி கிணற்றில் விழுந்த விவசாயி ஜெய்சங்கர் உட்பட மூன்று பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.