சேலம் மாவட்டம், தாரமங்கலம் 9வது வார்டில் வசிக்கிறார் வாசு. கைத்தறி நெசவாளர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு பாரதி நாகராஜ் (வயது 23) மற்றும் ஜெயக்குமார் (வயது 21) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவருமே எல்லா குழந்தைகளையும் போலவே நல்ல கை, கால்களுடன் எந்தக் குறைகளும் இல்லாமல்தான் பிறந்துள்ளனர். அவர்கள் 5 வயதாக இருந்தபோது திடீரென்று எழுந்து நடக்க முடியாமல் கால் எலும்புகள் வளையத் தொடங்கின. அடுத்து, கழுத்து, கைகள் என உடலின் முக்கிய எலும்புகளின் வளர்ச்சியும் குன்றின.
அதற்குமேல் மனதளவில் வளர்ந்தார்களே தவிர, உடல் அளவில் பெரிய முன்னேற்றம் இல்லை. அவர்களால் எழுந்து நடக்க முடியாது. தவழ்ந்துதான் செல்கின்றனர். அல்லது சக்கர நாற்காலி துணைகொண்டு செல்ல வேண்டிய நிலை. லேசாக செவித்திறன் குறைபாடும் இருக்கிறது.
இந்நிலையில், இரண்டு அடி உயரமே உள்ள அண்ணன், தம்பி இருவரும் சக்கர நாற்காலி வண்டியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சனிக்கிழமையன்று (பிப். 19) ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். தள்ளாத வயதில் உள்ள அவர்களின் தந்தை வாசுவும், தாயார் தமிழ்செல்வியும் மகன்கள் இருவரையும் சக்கர நாற்காலியில் ஒன்றாக அமர வைத்து தள்ளி வந்தனர். இந்தக் காட்சி, வாக்குச்சாவடியில் குவிந்திருந்த வாக்காளர்களிடையே ஆச்சர்யத்தையும், அதேநேரம் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளி இளைஞர்கள் இருவரும், தாரமங்கலம் செங்குந்தர் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். இவர்களில், பாரதி நாகராஜ் பி.காம்., படித்திருக்கிறார். ஜெயக்குமார் பி.காம்., முடித்துவிட்டு, தற்போது எம்பிஏ படிக்கிறார். சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் படித்ததாகச் சொன்னார்கள்.
அவர்களிடம் பேசியபோது, ''எங்கள் ஊர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்து வாக்களிக்க வந்திருக்கிறோம்,'' என்றனர்.
ஜெயக்குமார் கூறுகையில், ''எனக்கு கார் ஓட்டணும்னு ஆசையாக இருக்கு. சின்ன வயசுல இருந்தே ஒவ்வொரு கார் செல்லும்போதும் எனக்கு கார் ஓட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கும்,'' என்றார்.
அவர்களுடைய பெற்றோர் கூறுகையில், ''கைத்தறி நெசவு நெய்துதான் பிழைப்பு நடத்தி வருகிறோம். மாதத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக தலா 1500 ரூபாய் கிடைக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் வைத்திய செலவுகளையும், குடும்ப செலவுகளையும் கவனித்துக் கொள்கிறோம்.
எங்க பசங்களுக்கு இப்படி ஆகிட்டாங்களேனு வருத்தப்பட்டதை விட, சொந்தக்காரங்க சொன்னதை நினைச்சாதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இவர்கள் கை, கால்கள் வளர்ச்சி இல்லாமல் மாற்றுத்திறனாளியாக ஆனதைப் பார்த்த சொந்தக்காரர்கள் பலர், ரெண்டு பேரையும் கொன்னுடுங்கனு கூட சொன்னாங்க. பெத்த மனசுக்கு அப்படியெல்லாம் செய்யத் தோணும்களா... எவ்வளவோ கஷ்டத்துக்கு இடையிலும் அவர்களை வளர்த்து ஆளாக்கி இருக்கோம். எதனால பசங்களுக்கு இப்படி ஆச்சுனு இதுவரைக்கும் தெரியலைங்க. நாங்களும் பார்க்காத டாக்டருங்க இல்லை,'' என்றனர்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், விஐபி அந்தஸ்திலும், கைநிறைய சம்பாதிக்கும் பலர் வாக்களிக்க வராத நிலையில், இரண்டு அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு இடையிலும் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த நிகழ்வு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதேநேரம், அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு வெறும் உதவித்தொகையுடன் நின்று விடாமல் அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பையும் கொடுத்து, கவுரவத்துடன் வாழவும் வழிவகை செய்ய வேண்டும்.