Skip to main content

தனியாக குளிக்கச் சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி... சோகத்தில் கிராமம்...

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
two boys passes away ;village people shocked

 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது கொடுங்கால் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் 12 வயது தினேஷ்குமார், பத்து வயது அஸ்வின்குமார். இவர்கள் முறையே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள குளத்தில் குளிப்பதற்காகத் தனியே சென்றுள்ளனர்.

 

அப்படிச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர்கள் பல்வேறு இடங்களில் இரு பிள்ளைகளையும் தேடியுள்ளனர். இந்த நிலையில் தினேஷ்குமார், அஷ்வின் குமார் இருவரும் ஊர்குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்துள்ளனர். இதைப் பார்த்த ஊர்மக்கள் திரண்டு சென்று இரு சிறுவர்களின் உடல்களையும் குளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கொடுங்கால் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார்.