
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்தகட்ட திட்டமாக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெருத் தெருவாக, வீதி வீதியாக மக்களிடையே கட்சியினுடைய கொள்கைகளை கொண்டு செல்ல வாகன பிரச்சாரத்தை தொடங்க தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் நடைப்பயணம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்ட இருப்பதாகக் கூறப்படும் நிலையில் வாகன பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்திருப்பதாகவும், விரைவில் நிர்வாகிகள் நடத்தும் வாகன பிரச்சார பயணத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.