Skip to main content

விஜய்யை வரவேற்க கோவை விமான நிலையத்தில் குவிந்த த.வெ.க.வினர்!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

TVk supporters gathered at Coimbatore airport to welcome Vijay

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்றும் (26.04.2025), நாளையும் (27.04.2025) என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த 2 நாள் கருத்தரங்கில் முதல் நாளில் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக ரீதியான 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், 2ஆம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளதாகவும் கூறப்படுக்கிறது. இதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வர உள்ளார். இதற்காக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாகக் கோவை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். மேலும் கோவை விமான நிலையத்தில் இருந்து பூத் கமிட்டி நடைபெற இருக்கும் இடம் வரை உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  முன்னதாக தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கும் விஜய் மதியம் 03.30 மணியளவில் பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்