விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. முன்னதாக அக்கட்சியின் கொடியை விஜய் அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். இதனால் மாநாட்டிற்குத் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதற்கிடையே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் இந்த மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய பல்வேறு குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் (12.10.2024) உத்தரவிட்டிருந்தது. அதோடு மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்தாலும் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாடு நடைபெறும் வி.சாலையில் என்ற இடத்தில் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் தமிழக வெற்றி கழகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர்களையும் அகற்ற உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாநாட்டுத் திடலின் முகப்பில் ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, பூலி தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.