தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவருடைய மகன் பழனி குமார் (வயது 30). இவர் கேரள மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த ராமையா என்பவரது மகள் முத்துமாரிக்கும் (வயது 21) கடந்த 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் பழனிகுமார் இல்லத்தில் தங்களது மணவாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி குமார், முத்துமாரி ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். மாலையில் வெகு நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு திரும்பவில்லை. இவர்கள் இருவரையும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். நேற்று காலை மேல ஆத்தூரில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த நீர்த்தேக்க குளத்தில் இருவரும் சடலமாக மிதந்துள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். போலீசார் முன்னிலையில் தம்பதிகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரின் மரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான மூன்றாவது நாளிலேயே புதுமண தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.