Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்; சிபிஐ தரப்பில் விளக்கம் தர உத்தரவு

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Tuticorin incident CBI orders clarification

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையைத் தமிழக அரசிடம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தார்.

அதே சமயம், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் ஹென்றி திபேன் வாதிடுகையில், “ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராகத் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முறையாக விசாரணை நடத்தாத இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது. எனவே தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “ஒரேயொரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு, மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு எப்படி நற்சான்று வழங்கப்பட்டது. அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா எனவும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர வேண்டும்” என உத்தரவிட்டனர், இதனையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்