அதிமுக, பாமக, பாஜக கூட்டணி மக்கள் விமர்சிக்கும் கூட்டணி என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், மக்கள் சந்திப்பு பயணம் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக நேற்று முன்னாள் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியிலும், நேற்று நெய்வேலி தொகுதியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பேசினார்.
நிகழ்ச்சிகளில் அவர் பேசும்போது, " பாமக தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடந்த ஒரு வாரம் முன்பு வரையில் அதிமுக அரசை விமர்சனம் செய்து வந்தனர். சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க கூடாது என நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் மக்கள் வெறுக்கும் பாஜக, இந்த ஆட்சி எப்போது கவிழும் என மக்கள் நினைக்கும் அதிமுக, நேற்று ஒன்று, இன்று ஒன்று பேசும் பாமக, இந்தக் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று பொதுமக்களும், சமூக வளைதளங்களிலும் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தக் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
இன்னொரு பக்கம் தமிழர் விரோத கூட்டணி. கடந்த காலத்தில் காங்கிரசுடன் கைகோர்த்த திமுக தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கான ஏதும் செய்யவில்லை. அதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வருகின்றது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. எனவே, மக்கள் பிரச்சனை தீர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வடமாநிலத்தவருக்கு வேலை கொடுப்பதை நிறுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தள்ளிப்போட்டு வருவதாக கூறப்படுகிறது. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவட்டம் ஆக எல்லா தகுதிகளும் உடைய விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் " என்றார்.