Skip to main content

நான்காவது முறையாக நீட்டிப்பு - கலக்கத்தில் டி.டி.எஃப் வாசன்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

 TTF Vasan Issue; Extension for the fourth time

 

அண்மையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் பிரபல பைக் ரேஸ் யுடியூபர் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கிச் சென்றபோது, வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் என பலமுறை ஜாமீன் பெற முயன்றும் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. குறிப்பாக உயர்நீதிமன்றம்  டி.டி.எஃப் வாசனின் பைக்கை எரித்து விடும்படியும், அவரது யூடியூப் சேனலை முடக்கும்படியும் கடுமையாக சாடியிருந்தது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் டி.டி.எஃப் வாசன் உள்ள நிலையில், கடந்த 16 ஆம் தேதி மூன்றாவது முறையாக டி.டி.எஃப் வாசனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 நாட்கள் (நவ.9 வரை)  நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் நான்காவது முறையாக டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்