Women who robbed Rs. 50,000

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மனைவி செல்வி(45). இவரது மகன் அஜித்குமார், மருமகள் பிரீத்தி. 2 மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தாலி பிரித்து கோர்ப்பதற்காக நகை வாங்க திட்டக்குடி வந்துள்ளனர். கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது கடை முன்னால் நின்றுகொண்டு நோட்டமிட்ட இரண்டு பெண்கள் இவர்களுக்கு பின்னாலேயே சென்றனர்.

Advertisment

அதில் ஒரு பெண் தம்மிடம் 15 தங்க காசுகள் இருப்பதாகவும், தனது கணவருக்கு சென்னையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும், அதற்காக அந்த தங்க காசுகளை வைத்துக்கொண்டு ரூ.50,000 மட்டும் பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு யோசித்த செல்வி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், நீங்க போட்டிருக்கிற நகையை அடமானம் வைத்து பணம் கொடுங்கள். எனக்கு ரொம்ப அவசரமாக இருக்கிறது. என் கணவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என வலியுறுத்தி கேட்டுள்ளார்.

Advertisment

அதனால் மனம் இளகிய செல்வி, தனது நகைகளை அருகிலிருந்த அடகு கடையில் அடமானம் வைத்து 50,000 ரூபாய் பணத்தை வாங்கி அதை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய உடன் அந்த பெண்கள் கையில் வைத்து இருந்த காசுகளை செல்வியிடம் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து செல்வியின் மருமகள் பிரீத்தி நகையை பார்த்தவுடன் இது கவரிங் நகை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திட்டக்குடி காவல்துறையினர் கடைவீதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் செல்வியிடம் பேசிக் கொண்டே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment