மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சட்டப்பேரவை அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்திலும் 7வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் காரணமாக புதுச்சேரியில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு ரூ. 150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரியில் 50-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட பேரணியாக வந்தனர். அப்போது சம்பா கோவில் அருகே போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தியதால் லாரி உரிமையாளர்கள் அங்கேயே சிறிது நேரம் முற்றுகையிட்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.