திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சேதுரத்தினபுரம், பொத்தமேட்டுப்பட்டி மற்றும் மணப்பாறை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொத்தமேட்டுப்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது மணல்மேல்குடியைச் சேர்ந்த மாதவன் (வயது 26), தாராபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 22) ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் கைது செய்தவர்களில் ஒருவரான ஆகாஷ் என்பவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் அங்கிருந்து போலீசாருக்கு போக்கு காட்டி விட்டுக் கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்று குமரபட்டியில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாதவன் வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஆகாஷ் மற்றும் மாதவனுக்கும் உதவியாக இருந்த குளித்தலையைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்பவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆகாஷை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில் தனியார் கல்லூரி அருகே கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். எடுத்துச் சென்ற இருசக்கர வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு அழைத்து வரும் பொழுது, கலிங்கப்பட்டி பாலம் அருகே தான் திருடிய வாகனம் இருப்பதாகக் கூறியதால் வாகனத்தை விட்டு இறங்கி, காவலர்கள் ராமு மற்றும் தாசையாவை கீழே தள்ளிவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது ஆகாஷின் வலது கால் உடைந்தது. இதையடுத்து ஆகாஷ் மற்றும் ஆகாஷ் தள்ளிவிட்டதில் காயமடைந்த ராமு, தாசையா ஆகிய மூவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை போலீசார் இவ்வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற திருடன் கால் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.