சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விழாக்கோலம் பூண்டு உள்ளது. கோவிலின் அனைத்து விமானங்கள், கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 234 அடி உயர ராஜகோபுரத்தில் அடிப்பகுதியில் இருந்து உச்சி வரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பூக்களால் அலங்காரம் செய்யும் பணியில் 200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மின்னொளியில் ராஜகோபுரம் ஜொலிக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாகவும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 26- ந்தேதி தொடங்கியது. அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று (06.01.2020) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக நம்பெருமாள் கருவறையிலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டுத் திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து செர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றடைந்தார்.
பரமபத வாசல் திறக்கப்பட்ட உடன் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்திப் பரவசத்தில் முழக்கமிட்டனர். பின் பரமபதவாசலைக் கடந்த நம்பெருமாள் அஙகிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளைப் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
இன்று 06.01.2020 காலை 08.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு பொதுஜன சேவையுடன் உபயதாரர் மரியாதை நடைபெறும். இரவு 11 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்திய இசையுடன் அதிகாலை 12.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். நம்பெருமாள் கடந்து செல்லும் பரமபதவாசல் இன்று (06.01.2020) இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பெரிய வைகுண்ட ஏகாதசி விழாவில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு உள்ளது. தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.