தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காமாட்சிபட்டியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கருணாநிதி, சத்தியநாராயணன் மற்றும் காவலர்கள் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சிபட்டியில் உள்ள சேகர் என்பவர் வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்து சிறிய ரக சரக்கு வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவதைக் கண்டுபிடித்தனர். மேலும் அங்கு இருந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் அதில் லட்சக்கணக்கான மதிப்பில் உள்ள போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.