Skip to main content

''பெல் நிறுவனத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி'' - திருச்சி சிவா பேட்டி

Published on 18/05/2021 | Edited on 18/05/2021
Trichy Bhel plans to produce oxygen with retired employees - Trichy Siva Interview

 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை அடுத்து ஆக்சிஜன் குறைபாடு  ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தியானது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. அங்கு மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

"அங்கு செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்ததால் அதில் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, புதிய  உற்பத்தி ஆலையை உருவாக்கலாம்" என பெல் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

 

இந்நிலையில், இன்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பெல் தொழிற்சாலையின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

 

Trichy Bhel plans to produce oxygen with retired employees - Trichy Siva Interview

 

''பெல் நிறுவனத்தில் புதிதாக ஆக்சிஜன் ஆலை தொடங்க இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் தற்போது  ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திருச்சி பெல் நிறுவனத்தில்  ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூன்று பேர் என்னை சந்தித்து, அங்கு  ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்தனர். அவர்களையும் அழைத்து வந்து பெல் தொழிற்சாலையின் நிர்வாகிகளை சந்தித்தேன். முதலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சாத்தியமில்லை என தெரிவித்தனர். பின்னர் இந்த சூழலில் காலம் தாழ்த்த கூடாது, எனவே முயற்சி செய்து பார்க்கலாம் என கூறினேன். அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஓய்வு பெற்ற ஊழியர்கள் முதலில் செயல்படாமல் பழுதடைந்து இருக்கும் அந்த இயந்திரத்தை பார்வையிடுவார்கள், பின்னர் பெல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்போடு மீண்டும் இயக்க முயற்சிப்பார்கள்.

 

அந்த முயற்சி கை கொடுத்தால் 20 நாட்களில்  மிக குறைந்த செலவில் ஒரு நாளைக்கு 350 சிலிண்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே அந்த பிரிவில் வேலை செய்துள்ளதால் அவர்களுக்கு அதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, அந்த முயற்சி வெற்றி பெறும். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசிடமிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதை நான் மத்திய அரசிடம் பெற்று தருவேன். பெல் நிறுவனத்தில ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டால், இந்த சூழலில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என கூறினார்.

 

மேலும் பேசிய அவர், ''தடுப்பூசிகளை பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு விற்று விட்டதால்தான் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில உரிமைகளை சரியாக பயன்படுத்தி தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் விடுவது, ஆக்சிஜனை பெறுவது, தற்போது ஆக்சிஜன், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படும் என்கிற அறிவிப்பு போன்றவற்றை செய்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்