Skip to main content

"தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" -  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

trichy balasamuthiram govt school tenth student incident minister report 

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடியதாகத் தெரிகிறது. இதில் சக மாணவர்கள் மௌலீஸ்வரன் கற்களைத் தூக்கி வீசியதாகத் தவறாக எண்ணி மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெளலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை கொண்ட நிலையில் மூன்று மாணவர்களும்  கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.  இந்த சூழலில் பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர் மவுலீஸ்வரன் இறப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம்,அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த, தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் த/பெ. கோபி என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த நிகழ்வின்போது பணியில் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்து உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்