தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே முக்காணி என்ற இடத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆற்றுப் பாலமானது கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. அதன்படி பாலம் சேதமடைந்து இன்றோடு (19.12.2024) ஒரு வருடம் ஆகிறது. அதே சமயம் இந்த பாலத்தைச் சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் ஒரு ஆண்டுக் காலம் கடந்த பின்பும் தற்போது வரை பாலத்தைச் சீரமைக்கும் பணி தொடங்காத தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தான் இன்று பாஜகவினர் பாலத்திற்கு ஓராண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனையும் மீறி அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர். இதனையடுத்து ஆற்றுப் பாலத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பாலத்திற்கு அருகே பாஜகவினர் வருகை தந்தனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த சிலர் மலர் வளையத்தை எடுத்துக்கொண்டு முக்காணி ஆற்றுப் பாலத்தை நோக்கி ஓடினர். இதனையடுத்து போலீசார் அவர்களைத் துரத்திச் சென்று நிறுத்தி வலுக்கட்டாயமாக மலர் வளையத்தைப் பிடுங்கினர். மேலும் அந்த மலர்மாலையை போலீஸ் வாகனத்தில்வைத்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அதோடு இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.