விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாய விளை நிலங்களில் உள்ள மரங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் வெட்டிய மின்வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில், “உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க லைன் எடுத்துச்செல்வதற்காக விருதாச்சலம் வட்டம், புது விருததகிரிகுப்பத்தில் ராயப்பன் என்கிற விவசாயி தோட்டத்தில் அனுமதி இல்லாமல் தேக்கு, மா, பலா மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியமும், பவர் கிரீட் நிறுவனமும் இந்த செயலை செய்துள்ளது. எனவே விவசாயியின் ஒப்புதல் இல்லாமல் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலங்களில் மின் கோபுரம் மற்றும் மின்சார பந்தல் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.