ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பஜார் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சுபம் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 11.03.2023 அன்று தக்கோலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் அவரது உறவினர் இருவருக்கும் அடிதடி நடந்தது. இது சம்பந்தமாக முத்துராமலிங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணை என்றதும் சண்டை போட்டுக்கொண்ட இருவரும் உறவினர்கள் என்பதால் சமாதானமாகப் போய்விட்டனர்.
ஆனால், “எங்க மேலயா புகார் கொடுத்த” என முத்துராமலிங்கத்தை சண்டை போட்ட இருவரும், “நீ யார் எங்கள் மீது புகார் கொடுக்க” எனக் கேட்டு கோபத்தில் தினந்தோறும் கடையின் முன்பு வந்து கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். எவ்வளவோ கெஞ்சியும் போதை இளைஞர்கள் மசியவில்லை. இதனால் முத்துராமலிங்கம் பயந்து கடையை மூடியவர், ஷட்டர் கதவில் ‘கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது’ என எழுதி ஒட்டிச் சென்றுள்ளார். ‘நாங்க அண்ணன், தம்பி. ரெண்டு பேரும் அடிச்சுக்குவோம் புடிச்சிக்குவோம். நீ யாருடா இடையல கேக்குறது’ என ஒரு படத்தில் சமாதானம் செய்ய வந்த வடிவேலை போட்டு பொளந்துக்கட்டுவார்கள். அந்த படக்காட்சி போல் உள்ளது இந்த விவகாரம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இதுபோன்று வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியிருந்தால் வியாபாரிகள் எப்படி தொழில் செய்வார்கள்? தமிழ்நாட்டில் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்களை பாதுகாப்பது போல் தமிழ்நாட்டின் நகரங்களில் வியாபாரம் செய்யும் தமிழக வியாபாரிகளை ரவுடிகளிடமிருந்து முதலில் காவல்துறை காப்பாற்ற வேண்டும்.