பாராளுமன்ற தேர்தலின், ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (01-06-24) துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்குக் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று (01-06-24) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அகிலேஷ் யாதவ், சரத்பவார், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளித்தார்.
இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காய்ச்சல் காரணமாகத்தான் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடையும். பெரும்பான்மையைப் பெறக்கூடிய இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 4ஆம் தேதி இரவு அல்லது 5ஆம் தேதி முடிவு செய்வோம்” என்று கூறினார்.