Skip to main content

“ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பச்சை பொய் பேசுகிறார்” - டி.ஆர்.பாலு

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

T.R. Baalu says Governor speaks green lies from his position

 

திருச்சி மாவட்டத்தில் மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று (23-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆரியம், திராவிடம் ஒன்று கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காவே கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்களும், முத்தராமலிங்க தேவர் ஆகியோரும் வெறும் சாதித் தலைவர்களாக கருதப்படுகின்றனர். காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்” என்று கூறினார்.

 

இந்த நிலையில், ஆளுநர் பேசியது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம். பா.ஜ.க தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்கு போட்டியாக, தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார். 

 

முதல்வர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்களை பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ் அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல்.

 

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி அமர்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களை பேசுகிறார் ஆளுநர். தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதைக் கைவிட வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் பதவியை விட்டு விலகி அரசியல்வாதியாக, ஏன் பா.ஜ.கவின் தலைவராகவோ, ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராகவோ ஆகட்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநரின் விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்! சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இதனையேற்று பல்கலை. செனட் மற்றும் சிண்டிகேட் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.

 

இதனிடையே, ஆளுநரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், மதுரை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று காமராஜ் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்களைப் பெற்றனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர்  ஆளுநர் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். 

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

Next Story

“ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர்” - கே.எஸ். அழகிரி

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

KS Alagiri criticized tamilnadu governor

 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39வது நினைவு நாளான நேற்று (31-10-23) இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், “மாநில அரசாங்கம் அதன் எல்லைகளுக்கு உட்பட்டு தான் கடன் வாங்குகிறது. அது மாநில அரசுகளின் உரிமை. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததை விட இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு ஏராளமாக கடன் வாங்கியுள்ளது. மத்திய அரசுக்கு கடன் வாங்குகின்ற உரிமை உள்ளது என்றால் தமிழக அரசுக்கு கடன் வாங்கும் உரிமை இல்லையா? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தவறான கருத்துக்களை மக்கள் நிராகரித்து விடுவார்கள். 

 

தமிழக ஆளுநர் மாநில அரசை சந்திக்க பயப்படுகிறார், குறை சொல்கிறார், விமர்சிக்கிறார். அவருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், தமிழக அரசு செயலாளரையோ அல்லது  போலீஸ் டி.ஜி.பி.யையோ அழைத்து அவர்களிடம் அவரது கருத்துக்களை கூறலாம். அதை விட்டுவிட்டு பத்திரிகையாளர்களையும், பா.ஜ.க.வையும் நம்பி இருக்கிறார். எல்லா விதமான அடிப்படை முரண்பாடுகளுக்கும் அவர் மட்டும் தான் பொறுப்பு. தமிழக ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல, வெளியேற்றப்பட வேண்டியவர்” என்று கூறினார்.