தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாகக் காய்கறிகளின் விலை அதிகரித்தது. புதுச்சேரியில் கடந்த ஞாயிறு அன்று கனமழை காரணமாகக் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கத்தரிக்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும், தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், புடலங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் அத்தியாவசிய காய்கறிகளுள் ஒன்றான தக்காளியின் விலை 150ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பதி, விமான நிலையம், ரயில்நிலையம் என எங்கு திரும்பினாலும் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வாகன போக்குவரத்து தடை மற்றும் கனமழையின் காரணமாகக் காய்கறிகளின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
இதனால் ஆந்திராவிலிருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தமிழ்நாட்டுக்கு வருவது தடைப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை 150ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலையைக் கேட்டு பலர் தக்காளி வாங்காமல் இல்லம் திரும்பி வருகிறார்கள். அரசு இந்த மழைக்காலத்தில் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளைச் சரி செய்து விலையேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்ற நேரங்களில் சிலர் நூதன முறையில் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்வது நடைபெற்றுத்தான் வருகிறது. இதுபோன்று அண்மையில் வெங்காயம் விலை அதிகரித்தபொழுது ஃபோன் வாங்கினால் வெங்காயம் இலவசம், தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் ஃப்ரீ என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர் சில சிறிய கடைக்காரர்கள். அந்த வகையில் செங்கல்பட்டில் பிரியாணி கடை ஒன்றில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என்று விற்பனையைத் தொடங்கியிருக்கிறார் ஒரு கடைக்காரர்.