கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது என்று பழங்குடியின பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில், வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன., அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இது மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை அமைக்க எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்தது.
இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களையும், ஈஷா அறக்கட்டளை தரப்பின் ஆவணங்களையும் கோவை நகரத் திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்து அதில், சம்பந்தப்பட்ட கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறப்படவில்லை என்று தெரிந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.