2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) "தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்" கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளது என பட்டியலிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு மதம் குறித்து எந்த தகவல்களையும் கொடுக்க வேண்டியதில்லை. ஆதாரம் எதுவும் தேவையில்லை, வாய்மொழியாக சொன்னாலே போதும். ஒருவர் இந்தியனாக இருந்தால் இந்தியன் என்று வாய்மொழியாக சொன்னாலே ஏற்றுக்கொள்ளப்படும். மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக கூடுதலாக சேர்க்கப்பட்ட கேள்விகள் பற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. குடியுரிமை சட்ட விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்". இவ்வாறு அமைச்சர் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்ற உறுதியை தமிழக அரசு அளிக்குமா? என்று எழுப்பினார்.