
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) சட்டப்பேரவையில் தொடங்கியது. இதனையொட்டி 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதற்கிடையே பல்வேறு மசோதாக்களும் அவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழக அமைப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதா நிறைவேறியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதோடு பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விரிவாக விவாதம் நடத்தப்பட்டது. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2025) 2025-26ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை 23 ஆயிரத்து 221பேர் பார்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.