புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று வியாழக்கிழமை மாலை கடும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கீரமங்கலத்தில் இடி தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பர விடுதி ஒத்தாங்கொல்லை பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூரில் வேலை செய்து வரும் கோபுவுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி வித்யா (31) என்ற மனைவியும் பவ்யாஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். கோபு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
வியாழக்கிழமை மாலை வீட்டு வாசலில் நின்ற மரங்களிலிருந்து கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருக்கும் போது அருகில் நின்ற புளியமரத்தில் இடி, மின்னல் தாக்கி அருகில் நின்ற வித்யா மீதும் தாக்கியது. இதில் உடல் கருகி வித்யா சுருண்டு விழுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் வித்யா உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினரும், கீரமங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வித்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது இளம் மனைவி வித்யா மின்னல் தாக்கி உயிரிழந்த தகவல் அறிந்து கோபுவும் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். மழை தொடங்கும் முன்பே இடி மின்னல் தாக்கி 2 வயது குழந்தையின் தாயான இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.