தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.