கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலில் 'கன்னித் திருவிழா' தொடங்கி 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் கன்னித் திருவிழா அதேநாளில் தொடங்கியது. இதில் அதே ஊரைச் சேர்ந்த ஏழு கன்னிப்பெண்கள் கன்னி ஆடிவந்தனர். இன்று 13வது நாள் பிற்பகல் கன்னித் திருவிழா நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த ஏழு கன்னிப் பெண்களை அதே பகுதியில் உள்ள சித்தேரிக்கு அழைத்துச் சென்று கன்னி விடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது ஏரி தண்ணீரில் சாமியாடி இறங்கிய பெண்களில் நந்தினி (17), புவனேஸ்வரி (19), வினோதினி (18) ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூவரும் கல்லூரியில் படித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்த், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றார். கன்னித் திருவிழாவில் பங்கேற்ற 3 கன்னிப்பெண்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.