
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே தொடங்கிய மக்கள் போராட்டம் காட்டுத்தீயாக பரவி தமிழகம் கடந்தும் நடந்தது.
திட்டத்தை கைவிடுவோம்.. போராயவர்கள் மீது வழக்கு போடமாட்டோம், 15 ஆண்டுகளுக்கு வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை 9 மாதங்களில் அகற்றி விவசாயிகளிடம் விவசாய நிலமாக ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் உறுதி மொழி எழுதிக் கொடுத்த நிலையில் போராட்டங்கள் கைவிடப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் போராடியவர்கள் மீது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் தான் வந்தது. சம்மன் வந்த நிலையில் நெடுவாசல் போராட்டக்குழு கூடி வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அத்துடன் உங்கள் உறுதிமொழிபடி ஆழ்குழாய் கிணறுகளை அகற்றவில்லையே என்று குழுவினர் கேட்ட போது.. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற அதிக செலவாகும் என்பதால் தாமதம் ஆகிறது. மேலும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்கள் இன்னும் குத்தகை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்த நிலையில்.. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த ஆண்டு மார்ச் 6 ந் தேதி கீரமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று, ஆலங்குடியில் 42 பேர், வடகாட்டில் 9 பேர் மற்றும் நல்லாண்டார்கொல்லையில் 4 பேர் என மொத்தம் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களை வெவ்வேறு நாட்களில் ஆஜராகுமாறு ஆலங்குடி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதில், கீரமங்கலத்தைச் சேர்ந்த 7 பேர் துரைப்பாண்டியன், கண்ணன், குமார், துரை, பாண்டியன், செங்கு உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். அப்போது, நீதிபதி விடுப்பில் சென்றுவிட்டதால் இவ்வழக்கு ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இதில் பலர் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆஜரானார்கள்.
இதேபோல, வடகாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 9 பேரையும் ஆஜராகுமாறு நீதிமன்றத்தில் நேற்று அழைக்கப்பட்டது. அப்போது, சம்மன் ஏதுமின்றி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேர் ஆஜராகினர். அப்போது, தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென நாளிதழ்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்தும் ஆஜரானதாக விளக்கம் அளித்தனர்.
சம்மன் கொடுக்காதது தொடர்பாக வடகாடு காவல் நிலையத்தில் இருந்து ஆஜரான போலீஸாரிடம் விவரம் கேட்ட நீதிமன்ற பணியாளர்கள், மறு சம்மன் வரும்போது ஆஜராகுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆலங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேரின் வழக்கு மே 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.