
தென் மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சென்று பலர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் மலேசிய சிறையில் கைதிகளாக இருந்த 23 பேர் விமானத்தில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தென்மாவட்டங்களில் இருந்து கோலாலம்பூருக்கு சுற்றுலா விசாவில் சென்று, அங்கு பணியாற்றி, பின்னர் கைதாகி கடந்த 6 மாதம் முதல் 1 வருடம் வரை கோலாலம்பூரில் உள்ள சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதில் அவர்களது விமான கட்டண தொகையை ஏற்கனவே அவர்களது உறவினர்கள் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானத்தில் வந்த 23 பேரும் திருச்சி ஏர்போட்டில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, இறுதியாக விமான நிலையத்தை விட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு மற்றும் உணவருந்துவதற்கும் கூட பணமின்றி தவித்தனர். மேலும் அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக வைத்திருந்த செல்போன்களும் மலேசிய போலீசாரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் அவர்கள் திருச்சி ஏர்போட்டில் பரிதவித்தனர்.
இதனை அறிந்த விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் அதிகாரிகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து 23 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.