தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டி.எஸ்.பி ஆளுகைக்கு உட்பட்டது, எப்போதும் வென்றான் காவல் நிலையம். இந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட காட்டு நாயக்கன்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தினர் பாரம்பரியமாக வழிபட்டு வரும் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அண்மையில் புனரமைக்கப்பட்டு கடந்த செப்.11-ந்தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் கோவிலுக்கு 'கடிகாரம்' ஒன்றை தானமாக வழங்கினார்.
அந்த கடிகாரம் மணிக்கு ஒருமுறை வேத மந்திரங்கள் ஒலிப்பதோடு, சரியான நேரத்தையும் குறிப்பிடும். ஆனால், அந்த கடிகாரத்தை அகற்ற வேண்டும் என உள்ளூர் போலீஸார் நெருக்கடி கொடுத்துள்ளனர். "மணிக்கு ஒருமுறை மந்திரம் ஒலிப்பதோடு, 'குறிப்பிட்ட சமூகத்தின்' பெயரையும் உச்சரிப்பதால், அதனை அனுமதிக்க முடியாது. நாளை வேறு சமூகத்தை சேர்ந்த வரும் இதேபோன்று, அவர்கள் வழிபடும் கோவிலில் கடிகாரம் வைப்பார்கள்" என்பது காவல்துறையின் வாதம்.
"முன்னோர்கள் காலத்தில் இருந்து வழிபட்டு வரும் கோவிலில், இப்போது உள்ள நவீன காலத்திற்கு ஏற்ப கடிகாரம் வைத்திருப்பதில் என்ன தவறு? எங்கள் கிராமத்தில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், நாளை வேறு சமூகத்தினர் இதேபோல் கடிகாரம் வைப்பார்கள். அப்போது, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை ஏற்க முடியாது. மற்ற ஊர்களிலும் வேறு சமூகத்தினர் கோவில்களில், இதே போன்ற அலாரத்துடன் கூடிய கடிகாரம் வைத்துள்ளனர்" என்கிறார் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் மாசானமூர்த்தி.
இதுதொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தை காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டதோடு எஸ்.பி. அருண்கோபாலனை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.