கடந்த 23- ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் நூதனமான முறையில் ஆற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்தது. இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார். பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட, அதே நேரத்தில் ரூபாய் 500 கோடி நிதியை ஒதுக்கிய தமிழக அரசு குடிமராமத்து பணிகளை முடுக்கிவிட்டது. பெரும்பாலான பாசன வாய்க்கால்களிலும், ஏரிகளிலும் மந்த கதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுமையடையாததால் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட தண்ணீர் இதுவரை வரவில்லை.

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும், திருவாரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடையவில்லை என கூறி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மாங்குடி விவசாயிகள் ஆற்றுபாலங்களுக்கு மாலை அணிவித்து, பழம், அகர்பத்தி, சாம்பிராணி வைத்து அஞ்சலி செலுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயி சங்கரன் கூறுகையில் "வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதி திறக்க வேண்டிய காவிரி தண்ணீர் வழக்கம்போல் திறக்காமல், தாமதமாக திறக்கப்பட்டதால் குறுவை் சாகுபடியை இழந்து தவிக்கிறோம். சம்பா சாகுபடிக்காகவாவது தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருவாரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வந்து சேருவதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கும், முழுமை பெறாத குடிமராமத்து பணிகளும், மணல் கொள்ளையுமே காரணம்," என்று ஆதங்கப்படுகிறார்.